ஆன்மிகம்

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம்

தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொணடு, அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

சேலம் -நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள, 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் வருடம் தோறும் தைப்பூச திருநாளன்று தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டும் தைப்பூச தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தைப்பூச நாளில் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதனைத் தொடர்ந்து சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளினார். மாலை 3:30 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொணடு “கந்தனுக்கு அரோகரா” என பக்தி முழக்கம் எழுப்பியடி வடம் பிடித்து தேர் இழுத்தனர். பக்தர்கள் பலர் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி, இளநீர் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை எடுத்து ஆடியபடி வந்தனர். திருத்தேர் கோவிலை சுற்றி உள்ள நான்கு ரத வீதிகளில் வலம் வந்தது.

தைப்பூசத்தை முன்னிட்டு ராசிபுரம், திருச்செங்கோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்தனர். அவர்களுக்கு வழிநெடுக பக்தர்கள் அன்னதானம், சிற்றுண்டி வழங்கினர்.

SCROLL FOR NEXT