கும்பாபிஷேகம் 
ஆன்மிகம்

தஞ்சை: திருவைக்காவூர் குதியாளம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கபிஸ்தலம் அருகே திருவைக்காவூர் குதியாளம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கபிஸ்தலம், ஜூன்.26-

தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் அருகே பிரசித்திப் பெற்ற திருவைக்காவூர் கிராமத்தில் ஸ்ரீ குதியாளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி திருப்பணிகள் நடைபெற்று, முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்றன.

கும்பாபிஷேக விழாவின் தொடக்கமாக கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள் உள்பட யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து மேள, தாளங்களுடன் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கடம் புறப்பாடு நடைபெற்றது.

புனித நீர் கலசங்கள், ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு ஸ்ரீ குதியாளம்மன், ஸ்ரீ மழுவேந்தி விநாயகர், ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ கருப்புசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதி கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் திருவைக்காவூர் கிராமவாசிகள், நாட்டாண்மைகள், விழா குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.