ஆனி பிரம்மோற்சவ விழாவிற்கான கொடியேற்றம் 
ஆன்மிகம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா தொடங்கியது

திருவண்ணாமலையில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், விநாயகர் வீதி உலா நடைபெற்றது

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அருணாசலேஸ்வரர் கோவில்

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டிற்கான ஆனி பிரம்மோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிரம்மோற்சவ துவக்க விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தங்கக் கொடிமரம் முன் எழுந்தருளி காட்சி தந்தனர்.

கொடியேற்றம்

தங்க கொடிமரத்தில் கொடியேற்றம்

அதனைத் தொடர்ந்து காலை 6.30 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, தங்க கொடிமரத்தில் கொடியேற்றினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதையடுத்து உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், விநாயகர் வீதி உலா நடைபெற்றது

10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் தினமும் காலை, மாலை அம்பாளுடன் சந்திரசேகரர் மற்றும் விநாயகர் சிறப்பு அலங்காரத்துடன், தனித்தனி வாகனத்தில் எழுந்தருளி, மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.