ஆன்மிகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மலர் மாலை திருப்பதி சென்றடைந்தது

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த கிளியுடன் கூடிய மாலை திருப்பதி சென்றடைந்தது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான இன்று காலை கற்பகவிருட்ச வாகன சேவை நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை நாளை இரவு நடைபெற உள்ளது. இதையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, கிளி, பட்டு, மங்கள பொருட்கள் நேற்று திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மலர் மாலை இன்று திருப்பதி சென்றடைந்தது. திருப்பதி ஏழுமலையான் கோவில் பெரிய ஜீயர் மடத்தில் மாலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, யானைகள் அணிவகுக்க, நாதஸ்வர இசையுடன் நான்கு மாட வீதிகளில் மாலை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, கோவில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த மாலை நாளை காலை மூலவர் மற்றும் மோகினி அலங்காரத்தில் அருள்பாலிக்கும் மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட உள்ளது.

SCROLL FOR NEXT