மகா விஷ்ணு 
ஆன்மிகம்

பத்மினி ஏகாதசியின் மகிமை

பத்மினி ஏகாதசி நாளில் முழு அளவிலான விரதம் இருக்க முடியாதவர்கள், பசும்பால் மற்றும் தண்ணீர் அருந்தி விரதத்தை கடைப்பிடிக்கலாம்.

பெருமாளை வழிபட்டு அவரது அருளைப் பெறுவதற்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி விரதம் ஆகும். விரதங்களில் மிக உன்னதமான விரதமாக கருதப்படும் ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தால் வாழும்போது செல்வச்செழிப்பும் வாழ்விற்குப் பின் மோட்சமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஏகாதசி தினம் மாதத்திற்கு இரண்டு வந்தாலும் சில ஏகாதசி தினங்கள் மிகவும் அரிதாகவும், சிறப்புமிக்கதாகவும் கருதப்படுகின்றன. அவ்வகையில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய அதிக மாததில் வரும் ஏகாதசிக்கு பத்மினி ஏகாதசி என்று பெயர். இந்த ஏகாதசியை கமலா ஏகாதசி, அதிக ஏகாதசி, புருஷோத்தம ஏகாதசி என்றும் அழைக்கிறார்கள். அதிக மாதத்தில் வரும் இந்த ஏகாதசியன்று விரதம் இருந்து பகவானை வழிபட்டால், மற்ற மாதங்களை விட அதிக மடங்கு புண்ணியங்களைத் தரும் என்பது ஐதீகம்.

குழந்தை வேண்டி விரதம்

பத்மினி ஏகாதசியில் விரதம் இருப்பது பல ஆண்டுகள் தவம் மற்றும் யாகங்கள் செய்ததற்கு இணையான புண்ணிய பலனை தரும் என பத்ம புராணம் சொல்கிறது. அஸ்வமேத யாகம் செய்ததற்கு இணையான பலனை இந்த ஏகாதசி விரதம் அளிக்கும் என ஸ்கந்த புராணம் சொல்கிறது. இந்த ஏகாதசி பாவங்களை நீக்குவதுடன், முக்தியையும் அருளக் கூடியதாகும். குழந்தை வேண்டி விரதம் இருப்பவர்களுக்கு இது மிகவும் அற்புதமான பலனை தரக்கூடிய நாளாகும்.

இந்த பத்மினி ஏகாதசி விரதத்தின் மகிமைகள் மற்றும் அதனை கடைப்பிடிக்கும் முறை குறித்து யுதிஷ்டிரரிடம் பகவான் கிருஷ்ணர் விளக்கமாக கூறியிருக்கிறார்.

கிருஷ்ணர் விளக்கம்

இந்த ஏகாதசி மற்ற ஏகாதசிகள் போன்று கிடையாது. பிரம்மதேவரால்கூட இந்த ஏகாதசியின் சிறப்பை சொல்லி முடிக்க முடியாது. அவ்வளவு உயர்ந்தது. இந்த ஏகாதசி விரதம் கடைப்பிடிக்கும் பக்தர்களுக்கு எனது மிகச்சிறந்த கருணை நிச்சயமானது. அவர்கள் எனது முழுமையான கருணை மற்றும் திருவருளுக்கு பாத்திரமாகிறார்கள், என கிருஷ்ணர் தெரிவித்தார்.

இந்த ஏகாதசியன்று பக்தர்கள் முழு விரதம் இருக்கவேண்டும். தானியங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். முழு அளவிலான விரதம் இருக்க முடியாதவர்கள், பசும்பால் மற்றும் தண்ணீர் அருந்தி விரதத்தை கடைப்பிடிக்கலாம். முந்தைய நாளான தசமி தினத்தில் இருந்தே இந்த விரதத்தை தொடங்கவேண்டும். தசமி தினத்தன்று சூரிய அஸ்தமனத்திற்கு முன்னதாகவே உணவை சாப்பிட்டு, அதன்பின் விரதத்தை தொடங்கவேண்டும். மறுநாள் ஏகாதசியன்று அதிகாலை எழுந்து நீராடி, பூஜை செய்யவேண்டும். துவாதசியன்று காலையில் நீராடி, நிவேதனம் செய்து பிரசாதம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும் என்றும் கிருஷ்ணன் வழிகாட்டுகிறார்.

பத்மினி ஏகாதசியின் சிறப்பு

பத்மினி ஏகாதசியின் சிறப்பு குறித்து புலஸ்திய முனிவர், நாரதருக்கு கூறியதையும் கிருஷ்ணர் நினைவுகூர்ந்தார்.

மிகப்பெரிய சக்தி படைத்தவனான ராவணவன், ஒரு சமயம் மன்னர் கார்த்தவீரியார்ஜுனனிடம் தோற்றுப்போய்விட்டான். அவனால் சிறைப்பிடிக்கபட்டான். பின்னர், புலஸ்திய முனிவரின் கருணையால் ராவணன் காப்பாற்றப்பட்டான்.

தேவர்களாலும் வெல்ல முடியாத சக்தி படைத்த ராவணன் கார்த்தவீரியார்ஜுனனிடம் தோல்வியடைந்தது ஏன்? என புலஸ்திய முனிவரிடம் நாரதர் கேட்டார். இதற்கு பதிலளித்த புலஸ்திய முனிவர் இவ்வாறு கூறுகிறார்.

“மன்னர் கிருதவீரியன்-ராணி பத்மினி தேவிக்கு பிறந்தவர் கார்த்தவீரியாஜுனன். இவர் சாதாரணமான மானிடப் பிறவி கிடையாது. மன்னர் கிருதவீரியன்-ராணி பத்மினி தேவி தம்பதியருக்கு நீண்ட காலமாக குழந்தை பக்கியம் கிடைக்கவில்லை. இதனால் பத்மினி தேவி தொடர்ந்து பகவானை வழிபட்டு வந்தார். குறிப்பாக, புருஷோத்தம அதிக மாதத்தில் ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்து பகவானை வழிபட்டு, தனக்கு குழந்தை பாக்கியம் அருளும்படி பிரார்த்தனை செய்தார்.

அதன்பின்னர் பத்மினி தேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைதான் கார்த்தவீரியார்ஜுனா. பத்மினி தேவி ஏகாதசி விரதம் கடைப்பிடித்து பகவானின் அருளால் பெற்றெடுத்த குழந்தை என்பதால் அதிக சக்தி கொண்டிருந்தான். அதனால்தான் ராவணனால் அவனை ஜெயிக்க முடியல்லை” என்று கூறி முடித்தார் புலஸ்திய முனிவர்.

எனவே, பத்மினி தேவி, ஏகாதசி விரதம் இருந்து பகவானை வழிபட்டு குழந்தை பாக்கியத்தை அடைந்ததால் அந்த ஏகாதசி ‘பத்மினி ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது.

பக்தி மட்டுமல்ல பௌதிக விஷயங்களிலும் வெற்றியை கொடுக்கக்கூடிய பத்மினி ஏகாதசி நாளை (27.5.2026) கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து பகவானை மனதார வழிபட்டால், பகவானின் அருள் கிடைக்கப்பெறுவதுடன், பக்தியில் இருக்கக்கூடிய தடைகளும் நீங்கும்.