இந்தியா முழுவதும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் பிரமாண்ட பண்டிகை நவராத்திரி. சிவபெருமானுக்கு உகந்த நாள் 'சிவராத்திரி'. அதுபோல அம்பிகைக்கு உகந்த நாள் 'நவராத்திரி' ஆகும். 'நவம்' என்றால் 'ஒன்பது' என்றும், 'ராத்திரி' என்றால் 'இரவு' என்றும் பொருள்படும். அன்னை பராசக்தியை ஒன்பது நாட்கள் பல்வேறு வடிவங்களில் வழிபட்டு, பத்தாம் நாள் வெற்றியின் அடையாளமாக விஜயதசமி கொண்டாடப்படுவது நவராத்திரியின் சிறப்பாகும்.
இந்தியாவின் பல பகுதிகளிலும் பல்வேறு விதமான சடங்குகளுடன் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டாலும், அடிப்படை நோக்கம் சக்தியை போற்றுவதே ஆகும். புரட்டாசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்தி வடிவங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
எருமைத் தலை கொண்ட மகிஷாசுரன் என்ற அசுரன், பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் புரிந்து, தனக்கு தேவர்களாலும், பூதங்களாலும், மிருகங்களாலும், ஆண்களாலும் மரணம் நிகழக்கூடாது எனும் வரத்தைப் பெற்றான். பெண்கள் மென்மையானவர்கள் என்று கருதி, அவர்களை தவிர்த்து வரம் கேட்டான்.
தான் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்ட அரக்கன், தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தினான். இதனால் கவலை அடைந்த தேவர்கள் மும்மூர்த்திகளிடம் முறையிட்டனர். தேவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட மும்மூர்த்திகளும், தங்கள் சக்தியை ஒன்றுதிரட்டினர். அதில் இருந்து துர்கா தேவி தோன்றினார். தேவர்களும் தங்கள் சக்திகளை தேவிக்கு அளித்தனர்.
இதையடுத்து துர்கா தேவி, ஒன்பது நாட்கள் உக்கிரமாக போர்புரிந்து, பத்தாம் நாள் அசுரனை அழித்து உலகை காத்தார். இவ்வாறு தீமையை அழித்து தர்மத்தை நிலைநாட்டும் விதமாக அசுரனை எதிர்த்து போர் புரிந்த ஒன்பது நாட்களையே நவராத்திரியாக கொண்டாடுகிறோம்.
இந்த ஆண்டு நவராத்திரி விழா அக்டோபர் 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. நவராத்திரி ஒன்பது நாட்களில் சக்தி தேவியை துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய வடிவங்களாக வழிபடுவது சிறப்பு. அதாவது, நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியை வழிபடவேண்டும். அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபட வேண்டும்.
நவராத்திரி என்றதும் நினைவுக்கு வருவது கொலுதான். மகிஷாசுரனை அழிப்பதற்காக அன்னை அவதரித்தபோது, தேவர்கள் தங்கள் சக்திகளை தேவிக்கு அளித்து பொம்மைபோல நின்றனர். அதை குறிப்பிடும் வகையிலேயே வீடுகளில் கொலு அமைத்து வழிபாடு செய்யப்படுகிறது.
வீடுகளில் படிக்கட்டுகள் அமைத்து, அதில் புல், செடி, கொடி முதலிய ஓரறிவு உயிர் முதல் பறவைகள், விலங்குகள், முனிவர்கள், தெய்வங்கள் என அனைத்து வகையான பொம்மைகளும் அழகாக அடுக்கி வைக்கப்படும்.
கொலு படிகளை 3, 5, 7, 9, 11 என ஒற்றைப்படை வரிசையில் அமைக்க வேண்டும். படிகளில் கீழிருந்து கடைசி வரிசையில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும், அவர்களது துணைவியர்களான சரஸ்வதி, மகாலட்சுமி, துர்க்கை ஆகியோரது பொம்மைகளும் வைக்க வேண்டும். கொலு பீடத்தின் மத்தியில் விநாயகரையும், ஆதிபராசக்தியையும் வைத்து வழிபட வேண்டும்.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியர்களை வழிபட்டால் ஒப்பற்ற வாழ்க்கை அமையப்பெறும். வாழ்வில் உள்ள துன்பங்கள் நீங்கி இன்பத்துடன் வாழலாம்.