இறை வழிபாட்டில் மிக முக்கியமானவை மந்திரங்கள். மந்திர ஒலிகள், இறைவனின் வடிவமாகவே கருதப்படுகிறது. இறை மந்திரங்கள் ஒவ்வொன்றிற்கும் தனி சக்தியும், பலனும் உண்டு. மந்திரங்களை தொடர்ந்து உச்சரித்து வந்தால் பலவிதமான நன்மைகளை பெறலாம். அந்த வகையில் விநாயகரின் சில மந்திரங்களை தினமும் உச்சரித்து வந்தால் வாழ்வில் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறலாம்.
இந்து சமயத்தில் முழுமுதற் கடவுளாக போற்றப்படுபவர் விநாயகர். எந்தவொரு காரியத்தை தொடங்கும் முன்பும் விநாயகரை வழிபட்டு தொடங்குவது இந்துக்களின் வழக்கம். காரணம், விநாயகப் பெருமான் அந்த காரியங்களை தடையின்றி வெற்றிகரமாக நடத்தி வைப்பார் என்பது நம்பிக்கை. காரிய தடைகளை சந்திப்பவர்கள், தினமும் சொல்லவேண்டிய விநாயகர் மந்திரத்தை பார்ப்போம்.
“ஓம் வக்ரதுண்ட மஹாகாயே
சூரிய கோடி சமப்பிரப
நிர்விக்னம் குருமே தேவ
சர்வ கார்யேசு சர்வதா”
பொருள்:-
வளைந்த துதிக்கையும், பெரிய உடலையும், கோடி சூரியனுக்கு இணையான பிரகாசமான ஒளியையும் உடையவருமாகிய விநாயகப் பெருமானே! என்னுடைய எல்லா செயல்களையும் எந்தவித தடையும் இன்றி வெற்றி பெற அருள்புரிவாயாக.
இந்த மந்திரத்தை தினமும் காலையில் 108 முறை பாராயணம் செய்து வந்தால் வாழ்வில் உள்ள தடைகள் நீங்கி, வெற்றிகளை குவிக்கலாம்.
“ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்”
பொருள்:- முழுமுதற் கடவுளான பரம புருஷனை நாம் அறிவோமாக. வக்ர துண்டனை நினைத்து (சுருண்ட தும்பிக்கை உடையவன்) தியானம் செய்கிறோம். தந்தத்தை உடைய அந்த விநாயகப் பெருமான், நமது அறிவையும் செயலையும் ஊக்குவித்து நம்மை வழிநடத்தி வெற்றி பெறச் செய்வாராக.
விநாயகப் பெருமானை துதிக்கும்போது மற்ற மந்திரங்கள், அர்ச்சனைகள் முதலியவற்றை செய்வதும், மேற்கண்ட கணேச காயத்ரி மந்திரத்தையும் சொல்லி வழிபடுவதும் நல்லது.