ஆன்மிகத்தை அறிவுப்பூர்வமாக மக்களிடம் எடுத்துச் சென்ற ராமலிங்க அடிகளார் என்கிற அருட்பிரகாச வள்ளலாரின் 203-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
வள்ளலார், 1823-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மண்ணுலகில் தோன்றினார். கடலூர் மாவட்டம் மருதூர் என்ற கிராமத்தில் தந்தை ராமையா பிள்ளைக்கும், தாய் சின்னம்மையாருக்கும் ஐந்தாவது மகனாக பிறந்தார். இவருக்கு இரண்டு அண்ணன்களும், இரண்டு சகோதரிகளும் இருந்தனர்.
சிறுவயதிலேயே உலக இன்பங்களில் ஆர்வம் காட்டாமல், இறை சிந்தனையிலேயே திளைத்து, ஒன்பதாவது வயதிலேயே முருகப்பெருமானை தன்னுள் ஆட்கொண்டார். 12-வது வயதில் முறையாக ஞான வாழ்க்கை தொடங்கி, சென்னை கந்தகோட்டம் பெருமான் மீது அருட்பாக்களை பாடத் தொடங்கினார். ராமலிங்கம் என்ற பெயரே அருள் நிறைந்ததாக மாறியது.
'ஜீவகாருண்யம்' (அனைத்து உயிர்களிடத் தும் கருணை காட்டுவது) வள்ளலாரின் முதன்மையான கொள்கையாகும். 'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற அவருடைய வரிகள், அவரது கருணையின் உச்சத்தை உணர்த்தும் வரிகள் ஆகும். 1867-ம் ஆண்டு வடலூரில் சத்திய தர்மசாலை தொடங்கினார். சத்திய தர்மசாலையில் அன்று மூட்டிய அடுப்பு இன்றும் தொடர்ந்து ஏழை எளியவர்களின் பசிப்பிணியை போக்கிக் கொண்டிருக்கிறது. வடலூரில் 1872-ம் ஆண்டு சத்திய ஞான சபையை நிறுவினார். இந்த சபையை ஜாதி, மத, பாகுபாடு இன்றி அனைவரும் கூடும் ஆன்மிக மையமாக விளங்கச் செய்தார்.
மனித வாழ்வின் முன்னேற்றத்தில், மனிதனுடைய எண்ணற்ற மாயை நிறைந்த ஆசைகள்தான் இறைவனை காணும் பேரானந்த நிலையை அடைய மறைக்கிறது. அந்த மாய சக்திகள், கருப்பு, நீலம், பச்சை, செம்மை, பொன்மை, வெண்மை, கலப்பு என 7 திரைகளாக உள்ளன. இந்த திரைகள் அகல ஒரே வழி, ஜீவகாருண்யம் மட்டுமே. இதை பின்பற்றுவதன் மூலம் பேரானந்தத்தை அடைய முடியும் என்கிறார் வள்ளலார்.
1874-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ம் நாள் தைப்பூச நாளன்று, வடலூரில் உள்ள சித்தி வளாகத்தில் திருமாளிகை அறைக்குள் சென்று ஜோதியில் கலந்து ஒளியாகி கொண்டார்.
இன்றைய நவீன உலகத்தில் அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம், அபரிமிதமான தகவல் தொழில்தொடர்பு அமைப்பு, செயற்கை நுண்ணறிவு, அதிநவீன மருத்துவ வசதி, போக்குவரத்து முன்னேற்றம், கல்வியில் புதிய புதிய அணுகுமுறைகள், தொழில் நுட்பத்தில் எண்ணற்ற சாதனைகள் என்று தொடர்ந்தாலும், போர், வன்முறை, வறுமை, பசி, பாகுபாடு, தனிமை, சுற்றுச்சூழல் பாதிப்பு, விலங்குகளுக்கு அச்சுறுத்தல், பகைமை, பிரிவினை போன்றவையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் பொருளாதாரம், வளர்ச்சி, அமைதியான உலகத்தை உருவாக்க முடியாது.
இந்த காலகட்டத்தில் மனித குலம் தழைக்க, இந்த சமுதாயத்திற்கு வள்ளலாரின் கருத்துகள் மாபெரும் தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு மாமருந்தாக உள்ளது. சமுதாயத்தின் வேறுபாடுகளை களையும் கருணையுடன் கூடிய வளர்ச்சியும், அறிவுடன் சேர்ந்த நல்ல உள்ளமும் தேவை என்று வள்ளலார் வலியுறுத்துகிறார். கருணையற்ற அறிவு ஆபத்தாக மாறலாம், கருணையற்ற செல்வம் சமத்துவ இன்மையை ஏற்படுத்தலாம், கருணையற்ற அதிகாரம் அடக்கு முறையை உருவாக்கலாம். எனவே, தனது கருத்துகளான அன்பு, கருணை, உண்மை போன்றவை மூலமாக மனித உள்ளம் மாற வேண்டும் என்று வள்ளலார் விரும்பினார்.
மதம், ஜாதி, நாடு, செல்வம், மொழி, வேறுபாடு காரணமாக மனித குலம் பிரிந்திருக்கும் இந்த காலத்தில் வள்ளலாரின் சீர்திருத்த கருத்துகள் உணரப்படும்போது உலகில் மனிதகுலம் அமைதியுடன் வாழ முடியும். 'எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க' என்பதே வள்ளலாரின் குறிக்கோளாக இருந்தது.
வள்ளலார் ஒரு ஞான சித்தர் ஆவார். மரணம் இல்லா பெரு வாழ்வு பெற்று இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மனிதநேயத்தின் மாபெரும் சிகரம் வள்ளலார். ஜாதி, மதம், மொழி, நாடு என பாகுபாடு இன்றி வள்ளலார் வழியில் அன்பு, இரக்கம், கருணை ஆகியவற்றை பின்பற்றி அன்பும் அமைதியும் நிறைந்த சமுதாயம் உருவாக உறுதி ஏற்போம். வளமான, வலிமையான உலகை ஏற்படுத்துவோம்.
-தி.புவனேஸ்வரி கருணாகரன், ராணிப்பேட்டை