தீர்த்தவாரிக்காக சப்பரத்தில் புறப்பட்டுச் சென்ற அம்மன் 
ஆன்மிகம்

குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோவிலில் தீர்த்தவாரி: திரளான பக்தர்கள் பங்கேற்பு

பாரம்பரிய முறையை மாற்றி, அருவிக்கு அருகாமையில் உள்ள மண்டபத்தில் வைத்து அருவி புனித நீரை எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

தென்காசி,

தென்காசி மாவட்டம், குற்றாலம் மெயின் அருவிக்கு மேல் பகுதியில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள ஸ்ரீ செண்பகாதேவி அம்மன் கோவிலில் வருடம் தோறும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று திருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், நேற்று முன்தினம் சித்ரா பௌர்ணமி திருவிழாவானது வெகு விரிசையாக தொடங்கி நடைபெற்ற நிலையில், நேற்று அம்மனுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.

கோவிலுக்குப் பின்புறம் உள்ள செண்பகாதேவி அருவியில் மஞ்சள் துண்டுகளைக் கரைத்து, மஞ்சளாக கொட்டும் அருவி நீரில் அம்மனுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி பாரம்பரியமாக நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த வருடம் வனத்துறையினரின் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக பல நூற்றாண்டு காலமாக நடைபெற்று வந்த பாரம்பரிய முறை மாற்றப்பட்டு மஞ்சள் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறாமல், அருவிக்கு அருகாமையில் உள்ள மண்டபத்தில் வைத்து அருவி புனித நீரை எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகங்கள் மட்டுமே நடைபெற்றன.

இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். அதேசமயம், பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த பாராம்பரியம் வனத்துறையினரின் கடுமையான கட்டுப்பாட்டால் மாற்றப்பட்டிருப்பது பக்தர்கள் மத்தியில் மன வருத்தத்தை ஏற்படுத்தியது.

முன்னதாக செண்பகாதேவி அம்மன் கோவிலுக்கு சென்ற பக்தர்களிடம் வனத்துறையினர் கடுமையான சோதனை செய்தனர். பக்தர்கள் எடுத்துச் சென்ற பிஸ்கட் பாக்கெட்டுகளை உடைத்து பிளாஸ்டிக் கவர்களை அகற்றி பிஸ்கட்டுகளை தனியாக எளிதில் மக்கும் பேப்பர்களில் கட்டி வழங்கினர். பிளாஸ்டிக் பொருள்களையும் பறிமுதல் செய்தனர். வன விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.