தீர்த்தவாரி உற்சவம் 
ஆன்மிகம்

ஏகாம்பரநாதர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்

தீர்த்தவாரி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம்,

உலக புகழ்பெற்ற காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா உற்சவம் கடந்த மாதம் 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்றது. தினமும் வெவ்வேறு வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஏகாம்பரநாதருக்கும், ஏலவார்க்குழலி அம்மனுக்கும் கடந்த 1-ந்தேதி பங்குனி உத்திர திருக்கல்யாணம் நடந்து முடிந்த நிலையில் விழாவின் 13-வது நாளான நேற்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி வெள்ளி நந்தி வாகனத்தில் காஞ்சீபுரம் சர்வ தீர்த்த குளக்கரைக்கு எழுந்தருளிய ஏகாம்பரநாதர் ஏலவார்க்குழலி அம்மன் முன்னிலையில், சிவபெருமானின் அஸ்திர தேவர் எனும் சூலாயுதத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து சிவாச்சாரியார்கள் மந்திரங்களை ஒலிக்க சர்வ தீர்த்த குளத்தில் 3 முறை மூழ்கி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

தீர்த்தவாரி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஏகாம்பரநாதரையும், ஏலவார் குழலி அம்மனையும் தரிசனம் செய்தனர். மேலும், திருக்குளத்தில் இறங்கி புனித நீரை தெளித்து சென்றனர்.