தேனி,
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற முருகன் - வள்ளி - தெய்வானை திருக்கல்யாண வைபோகத்தில், திருமாங்கல்யம் சுற்றப்பட்ட தேங்காய் ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்திற்கு ஏலம் போனது.
தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற போடிநாயக்கனூர் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, நேற்று (திங்கட்கிழமை) காலை முருகன் - வள்ளி - தெய்வானை திருக்கல்யாண வைபோகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாண சடங்குகள் முடிந்த பிறகு, சுவாமிக்கு சாத்தப்பட்ட திருமாங்கல்யம் சுற்றப்பட்ட புனிதத் தேங்காயை ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த தேங்காயை வீட்டில் வைத்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இதனால் தேங்காயை ஏலம் எடுக்க பக்தர்களிடையே கடும் போட்டி நிலவியது.
ஏலத்தின் இறுதிக்கட்டத்தில் போடிநாயக்கனூரைச் சேர்ந்த குணசேகரன் என்பவருக்கும், மதுரை மாவட்டம் செல்லம்பட்டியைச் சேர்ந்த ரேணுகா என்ற பெண் பக்தருக்கும் இடையே பலத்த போட்டி ஏற்பட்டது. குணசேகரன் ரூ.2 லட்சத்து 45 ஆயிரம் வரை ஏலம் கேட்ட நிலையில், ரேணுகா அதைவிட கூடுதலாக ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்திற்கு ஏலம் கேட்டு தேங்காயை பெற்றுக் கொண்டார்.
ஏலத்தில் வெற்றி பெற்ற ரேணுகாவுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து, பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டுத் திருக்கல்யாணத் தேங்காய் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு இதே கோவிலில் திருக்கல்யாணத் தேங்காய் ரூ.2 லட்சத்திற்கு ஏலம் போன நிலையில், இந்த ஆண்டு அதைவிட ரூ.55 ஆயிரம் கூடுதலாக ஏலம் போயுள்ளது குறிப்பிடத்தக்கது.