ஆன்மிகம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தெப்ப உற்சவம்

திருவிழா நாட்களில தினமும் காலை மற்றும் இரவில் பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கிலும், இரவு பூத வாகனம், மரஅன்ன வாகனம், மர ரிஷப வாகனம், மரயானை வாகனம், வெள்ளி சேஷ வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

8-ம் நாளான நேற்று முன்தினம் இரவு அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

9-ம் நாள் திருவிழாவான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் உற்சவர் மண்டபத்தில் இருந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் எழுந்தருளி ஊர்வலமாக தெப்ப மண்டபத்திற்கு வந்தடைந்தார்.

தொடர்ந்து வாணவேடிக்கைகள் முழங்க 8.40 மணிக்கு திருக்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் அம்மன் எழுந்தருளினார். பின்னர் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தெப்பத்தில் வலம் வந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தெப்ப உற்சவம் நிறைவடைந்தபின்னர் அங்கிருந்து அம்மன் கடைவீதி, தேரோடும் வீதி வழியாக கோவிலை சென்றடைந்தார்.

10-ம் நாளான இன்று காலை தைப்பூசத்திற்காக கண்ணாடி பல்லக்கில் அம்மன் புறப்பட்டு ஸ்ரீரங்கம் வட திருகாவிரிக்கு வழிநடை உபயம் கண்டருள சென்றார் மாலை அங்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீரங்கம் ரெங்கநாதரிடம் இருந்து சீர் பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நாளை அதிகாலை மகா அபிஷேகத்தைத் தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். காலை முதல் இரவு வரை அம்மன் வழி நடை உபயம் கண்டருளி மண்டகப்படி கண்டருளுகிறார். இரவு 11 மணிக்கு கோவில் வந்தடைகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் விஎஸ்பி இளங்கோவன், இணை ஆணையர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT