பொன்னேரி,
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் அமைந்துள்ள பழமை வாய்ந்த புனித மகிமை மாதா திருத்தலத்தில் 548ம் ஆண்டு பெருவிழா கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது.
9 நாட்கள் நவநாள் மன்றாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில் 10வது நாளான நேற்று (18.4.2026) திருத்தல அதிபர் வர்கீஸ் ரொசாரியோ தலைமையில் மதுரவாயல் புனித தூய அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை ஆண்ரு முன்னிலையில் கூட்டு திருப்பலி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இரவு 11 மணி அளவில் புனித மகிமை மாதாவின் திருத்தேர் பவனி நடைபெற்றது.
தேர் பவனியின்போது ‘மரியே வாழ்க’ என்ற கோஷத்துடன் பக்தர்கள் உப்பு, பொரி, மிளகு தூவி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் மற்றும் பழவேற்காடு, சென்னை மற்றும் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருகை தந்து கையில் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்டனர்.