தேர் பவனி 
ஆன்மிகம்

புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலயத்தில் விமரிசையாக நடைபெற்ற தேர் பவனி

தேர் பவனியில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி,

புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலய திருவிழாவின் சிகர நிகழ்வான தேர் பவனி விமரிசையாக நடைபெற்றது.

புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலய 475ஆம் ஆண்டு திருவிழா கடந்த மாதம் 24ஆம் தேதி மாலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் காலையில் திருப்பலி, மாலையில் ஜெபமாலை, மறையுறை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றன.

30-ம் தேதி புன்னக்காயல் மீனவ கிராமத்தை சேர்ந்த 14 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. ஊர் கமிட்டி சார்பில் நடைபெற்ற இந்த திருமணத்திற்காக, ஜோடி ஒன்றுக்கு தலா 5 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.

நேற்று முன்தினம் காலை சிறப்பு நிகழ்ச்சியாக, புன்னக்காயலை சேர்ந்த சிறுவர் சிறுமியர் புது நன்மை மற்றும் உறுதி பூசுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் நற்கருணை பவனி நடைபெற்றது.

தேர் பவனி

நேற்று காலை 11 மணியளவில் தூய ராஜகன்னி மாதாவிற்கு மகுடம் சூட்டு நிகழ்ச்சியும், மாலையில் ஆராதனையும் நடைபெற்றது. இரவு ஒன்பது மணி அளவில் தூய ராஜகன்னி மாதா ஜெபமாலை மாதா சொரூபம் தாங்கிய தேர் பவனி நடைபெற்றது.

இன்று அதிகாலை 4 மணியளவில் தேர் முன்பு திருப்பலி, திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலியைத் தொடர்ந்து தேர் பவனி நடைபெற்றது. இந்நிகழ்வில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். தேர் பவனியின்போது புனித சவேரியார் பஜனை குழுவினர் பக்தி பாடல்கள் பாடி வந்தனர்.

SCROLL FOR NEXT