வேளாங்கண்ணி,
நாகை நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு வெளியூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏராளமானோர் வந்து வழிபடுகின்றனர். மேலும் இது சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இந்த ஆலயம் கீழை நாடுகளின் "லூர்து நகர்"என அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் கட்டப்பட்டு உள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் "பசிலிக்கா "என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்றுள்ள இந்த ஆலயத்தில் மே மாதத்தை மாதாவிற்கு உகந்த மாதமாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர்.
அதனையொட்டி இந்த ஆலயத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக சிலுவைப்பாதையில் தேர்பவனி நடைபெற்றது.
நிர்வாக தந்தை பரிசுத்தராஜ் புனிதம் செய்து தேர் பவனியை தொடங்கி வைத்தார். இதில் பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ், உதவி பங்குத்தந்தை அந்தோணி பெர்டினாண்டோ மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மாதாவை தரிசனம் செய்தனர்.