தேரோட்டம் 
ஆன்மிகம்

சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோவில் தேரோட்டம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருத்தேரில் பெருமாள் வீதி வலம் வரும்போது, பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

சீர்காழி,

திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் 39வது திவ்யதேசமாகவும், குமுதவல்லி நாச்சியார் அவதார ஸ்தலமாகவும் திகழ்கிறது. இங்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். அண்ணன் பெருமாளை தரிசிக்கும் பக்தர்களுக்கு திருப்பதி பெருமாளை சேவித்த பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது.

இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ம் நாள் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை நடத்தப்பட்டதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் ‘கோவிந்தா.. கோவிந்தா’ என பக்தி முழக்கம் எழுப்பியபடி வடம் பிடித்து தேர் இழுத்தனர். திருத்தேரில் எழுந்தருளி பெருமாள் வீதிவலம் வந்தபோது ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

SCROLL FOR NEXT