சென்னை,
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நரசிம்மர் பிரம்மோற்சவ விழா கடந்த 25-ந் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி வீதியுலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை கடந்த 27-ம் தேதி நடந்தது. சிங்கராச்சாரி தெரு, தேரடி தெரு, வடக்கு குளக்கரை தெரு, தெற்கு மாட வீதி உள்ளிட்ட வீதிகளில் நரசிம்மர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கருட வாகனத்தில் எழுந்தருளி வலம் வந்த பகவானை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (1.7.2026) நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணி அளவில் திருத்தேரில் பெருமாள் எழுந்தருளினார். சிறப்பு பூஜைக்கு பிறகு காலை 7 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர்.
தேர் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தபோது மேலே சென்ற வயரில் சிக்கி தேரின் உச்சியில் இருந்த குடை சரிந்தது. இதனால் தேர் நிறுத்தப்பட்டது. இதனைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சாய்ந்த குடையை உடனடியாக சரி செய்து மீண்டும் தேர் புறப்பட்டு நிலையை அடைந்தது.
ஜூலை 4-ந்தேதி இரவு 9.30 மணிக்கு சப்தாவர்ணம் எனும் சிறிய திருத்தேர் நிகழ்வு நடக்க இருக்கிறது. இந்த நிகழ்வுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.