தென்காசி,
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டியில் உள்ள ஸ்ரீ ராம சுவாமி, காளியம்மன் கோவில் கொடை விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான சுமங்கலி பூஜை நேற்று நடைபெற்றது. நேற்று இரவு கோவில் வளாகத்தில் நடைபெற்ற சுமங்கலி பூஜையில் திப்பணம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பங்கேற்று அம்மனை வழிபட்டனர். குடும்ப நலன், கணவரின் நீண்ட ஆயுள், குடும்பத்தில் மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவை பெருக வேண்டி சிறப்பு வழிபாடு செய்தனர். இதில் பங்கேற்ற பெண்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் பட்டு சேலைகள் வழங்கப்பட்டன.
இதேபோல் திருவிளக்குப் பூஜையும் விமரிசையாக நடைபெற்றது. புஷ்பாஞ்சலி, மேளதாளங்கள் முழங்க முளைப்பாரி ஊர்வலம், குற்றாலத்திலிருந்து புனித தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து இரவு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளன. மேலும், அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
பக்தர்களைக் கவரும் வகையில் பட்டிமன்றம், கரகாட்டம், கச்சேரி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து செய்துள்ளனர்.