கன்னியாகுமரி அருகே பொற்றையடியில் அமைந்துள்ள ஆதிபரன் அரசம்பதி கோயிலில் திரு ஏடு வாசிப்பு திருவிழா இன்று தொடங்கியது. இன்று காலை 6.30 மணிக்கு குரு சிவச்சந்திரன் திருக்கொடியை ஏற்றி வைத்தார். வரும் 30ஆம் தேதி திங்கள் கிழமை வரை 11 நாட்கள் விழா நடைபெறுகிறது.
விழா நாட்களில் தினசரி அதிகாலை 4 மணிக்கு சரவிளக்கு பணிவிடை, 6 மணிக்கு பால் பணிவிடை, பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, மாலை 4 மணிக்கு திருஏடு வாசிப்பு, இரவு 8 மணிக்கு உகப்படிப்பு, இரவு 8.30 மணிக்கு அன்ன தர்மம் நிகழ்ச்சிகள் தினசரி 11 நாட்களும் நடைபெறும். 1, 2 ஆம் நாள் மற்றும் 4 முதல் 7ஆம் நாள் திருவிழா நாளில் மதியம் 1 மணிக்கு அன்னப்பால் தர்மம் வழங்கப்படும்.
3ஆம் திருநாளான 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 11. 30 மணி வரை திரு ஏட்டுப்பலன் அருள்வாக்கு சட்டம், பகல் 12.30 மணிக்கு தொட்டில் வாகன பவனி, மதியம் 1.30 மணிக்கு அன்ன தர்மம், 2:30 மணிக்கு இனிமம் வழங்குதல் நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
8ஆம் திருநாளான 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஆதிபரன் வெண் குதிரை வாகனத்தில் கலிவேட்டையாடுதல், இரவு 8:30 மணிக்கு சுருள் எடுத்து ஊர்வலம், 9 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
9ஆம் திருநாளான 28ஆம் தேதி இரவு 7 மணிக்கு இகனை திருக்கல்யாணம், 8:00 மணிக்கு ஆதிபரன் கருட வாகன பவனி, 10 மணிக்கு அய்யா வழியில் இளம் இசை கலைஞர்கள் வழங்கும் அய்யாவின் அருளிசை நிகழ்ச்சி நடைபெறும்.