கொடி மரத்திற்கு தீபாராதனை 
ஆன்மிகம்

திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணித் திருவிழா தொடங்கியது

கொடிமர பீடம் தர்பை புல்லாலும், வண்ண மலர்களாலும், பட்டாடைகளாலும் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிளான வெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. கோவிலிருந்து கொடிப்பட்டம் பல்லக்கில் புறப்பட்டு, வீதி உலா வந்து மீண்டும் கோவிலை சேர்ந்தது.

பின்னர் 11 கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜை நடந்தது. பூஜையின் நிறைவில் காலை 7.30 மணிக்கு பொன் ஜெயராம் வல்லவராயர் கொடிமரத்தில் கொடியேற்றினார். பின்னர் கொடிமர பீடத்திற்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. கொடிமர பீடம் தர்பை புல்லாலும், வண்ண மலர்களாலும், பட்டாடைகளாலும் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தேரோட்டம்

இத்திருவிழா வருகிற 29-ந் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். 10-ம் திருநாள் (29-ந் தேதி) அதிகாலையில் தேரோட்டம் நடக்கிறது.