மயிலாடுதுறை,
மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் கோவிலில் நடைபெற்று வரும் காவிரி துலா உற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது.
மயிலாடுதுறை திருஇந்தளூரில் பரிமளரெங்கநாதர் கோவில் உள்ளது. பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் பஞ்ச அரங்கங்களில் இத்தலம் ஐந்தாவது தலமாகும். திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல் பெற்ற 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த கோவில், சந்திரனின் சாபம் தீர்த்ததும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வது திவ்யதேசமும் ஆகும்.
இத்தலத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் காவிரி துலா உற்சவம் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான துலா உற்சவம் கடந்த நவம்பர் 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு வழிபாடுகளுடன் நடைபெற்று வருகிறது.
இந்த உற்சவத்தின் 7-ம் திருநாள் நிகழ்ச்சியாக நேற்று உற்சவ மூர்த்திகளான சுகந்தவனநாதர் பெருமாளுக்கும், சுகந்தவனநாயகி தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவில் பிரகாரத்தில் மாலை மாற்றும் வைபவம், ஊஞ்சல் உற்சவம், பின்னர் பட்டாச்சாரியார்கள் திருமாங்கல்யதாரணம் செய்து வைத்து மகா தீபாராதனை காண்பித்தனர். தொடர்ந்து பூர்ணாகுதி சமர்ப்பிக்கப்பட்டு நலுங்கு உற்சவம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
துலா உற்சவ பெருந்திருவிழாவின் 9-ஆம் திருநாளாக வருகின்ற நாளை காலை திருத்தேர் உற்சவமும், மதியம் காவேரி மண்டபத்தில் எழுந்தருளி தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.