கல்யாண உற்சவம் 
ஆன்மிகம்

வல்லக்கோட்டை முருகன் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற கல்யாண உற்சவம்

கல்யாண உற்சவத்திற்கு மாலையுடன் வந்திருந்த பக்தர்கள், அந்த மாலையை முருகப்பெருமான் திருவடியில் சமர்ப்பித்து பின்னர் அணிந்துகொண்டனர்.

வல்லக்கோட்டை:

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் 1000 ஆண்டுகள் பழமையான சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற இத்தலம், கல்யாண பிரார்த்தனை தலம் ஆகும். இங்கு திருக்கோவில் சார்பிலும் உபயதாரர்கள் சார்பிலும் அடிக்கடி கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

அந்த வகையில் திருமண பிராத்தனைக்காக சென்னையைச் சேர்ந்த உபயதாரர் சார்பாக இன்று காலை கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு ஶ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி உற்சவருக்குப் பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் உட்பட பலவித பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து ரோஜா, சாமந்தி, மல்லிகை, சம்பங்கி மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு மணமக்கள் திருக்கோலத்தில் மயில் மண்டபத்திற்கு முருகப்பெருமான் எழுந்தருளினார். கல்யாண வரம்வேண்டி திராளான பக்தர்கள் மாலைகளுடன் வந்திருந்தனர்.

காலை 9.30 மணிக்கு கல்யாண உற்சவம் தொடங்கி 11.30 மணி வரை நடைபெற்றது. திருக்கோயில் தலைமை அர்ச்சகர் தலைமையில் ஐந்து அர்ச்சகர்கள் யாகம் வளர்த்து மந்திரங்கள் ஓதினர். மங்கலவாத்தியங்கள் ஒலித்திட 11.30 மணிக்கு மாங்கல்யதாரணம் நடைபெற்றது.

கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். மாலைகளுடன் வந்திருந்த பக்தர்கள், அந்த மாலையை முருகப்பெருமான் திருவடியில் வைத்து தாங்கள் அணிந்து கொண்டனர்.

திருக்கல்யாண வைபவத்திற்கு பிறகு கல்யாண கோலத்தில் முருகப்பெருமான் மூன்று முறை திருக்கோவிலை வலம் வந்தார். உற்சவத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் திருமண அட்சதை பிரசாதமும், சர்க்கரை பொங்கல், புளியோதரை பிரசாதங்களும் வழங்கப்பட்டன.

திருமணமாகாத பக்தர்கள் இந்த கல்யாண உற்சவத்தில் கலந்துகொண்டால் முருகன் அருளால் கல்யாண பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.