திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் 
ஆன்மிகம்

திருப்பரங்குன்றம்: கந்த சஷ்டி விழா நாளை தொடக்கம்- பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் நவம்பர் 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

மதுரை,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாளை தொடங்கப்படும் கந்த சஷ்டி விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கந்த சஷ்டி விழா நாளை தொடக்கம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், உலகப் புகழ்பெற்ற கந்த சஷ்டி பெருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) காப்புக் கட்டுதலுடன் கோலாகலமாகத் தொடங்குகிறது. நவம்பர் 16-ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு விரதம் மேற்கொள்வார்கள் என்பதால், கோவில் நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விரத பக்தர்களுக்கு உணவு- தங்குமிடம்

விழாவையொட்டி கோவில் வளாகத்திலேயே தங்கி 7 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்களின் நலன் கருதி பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கோவில் மண்டபங்களில் பக்தர்கள் தங்குவதற்குப் போதிய இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு பால், தினைமாவு மற்றும் பழங்கள் வழங்கப்பட உள்ளன. இதுதவிர, பக்தர்களுக்குத் தினந்தோறும் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகள் -நேரலை தரிசனம்

கோவில் வளாகத்தில் தங்கும் பக்தர்களின் தேவைக்காக தடையற்ற குடிநீர், மின்விசிறிகள் மற்றும் கூடுதல் கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. விழா நாட்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், அனைத்து பக்தர்களும் எளிதாக சுவாமி தரிசனம் செய்யவும் 'நேரலை தரிசன' ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இலவச- கிரிவலப் பேருந்து சேவை

பக்தர்கள் சிரமமின்றி கோவிலுக்கு வந்து செல்லும் வகையில் 3 இலவசப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அத்துடன், பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கும் சிறப்புப் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சூரசம்ஹாரம்- திருக்கல்யாணம்

கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் நவம்பர் 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 16-ம் தேதி (திங்கட்கிழமை) தேரோட்டம் மற்றும் திருக்கல்யாண வைபவத்துடன் விழா நிறைவடைகிறது.

SCROLL FOR NEXT