கொடியேற்றம் 
ஆன்மிகம்

திருவையாறு ஜயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றம்

ஆடிப்பூரத் திருவிழாவின் ஒரு பகுதியாக, பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு தேர் இழுக்கும் நிகழ்வு ஆகஸ்ட்13-ம் தேதி நடைபெறுகிறது.

திருவையாறு,

திருவையாறு அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர மஹோற்சவ விழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி இன்று காலையில் அம்மன் சன்னதி முன்பு உள்ள கொடி மரம் அலங்கரிக்கப்பட்டது. நந்தி பகவான் உருவம் வரைந்த கொடிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

விநாயகர், சண்டிகேஸ்வரர், அம்மன் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் தனித்தனி சப்பரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருள கொடி மரத்திற்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து கொடி மரத்தில் ஆடிப்பூர விழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

முதல் நாளான இன்று இரவு அறம்வளர்த்த நாயகி அம்மன் வெள்ளி படிச்சட்டத்தில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

பெண்கள் மட்டும் தேர் இழுக்கும் வைபவம்

11 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. தினமும் காலை மற்றும் இரவில் அம்பாள் வாகனத்தில் எழுந்தருளும் வைபவம் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான ஆடி அமாவாசையன்று (ஆகஸ்ட் 12) தென் கயிலாயத்தில் இரவு 9 மணிக்கு அப்பர் சுவாமிக்கு கயிலாய தரிசனம் கொடுத்தருளும் வைபவம் நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அப்பர் பெருமானை தரிசிப்பார்கள். அதை தொடர்ந்து முக்கிய விழாவான தேரோட்டம் ஆகஸ்ட் 13ம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்வில் பெண்கள் மட்டுமே கலந்துகொண்டு தேர் இழுப்பார்கள்.