திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம், கோவில் களப்பால் ஆயிரவேலி அம்மன் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு சுமங்கலி பூஜை நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே கோவில் களப்பால் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஆயிரவேலி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்றது. விழாவையொட்டி, கடந்த 11 நாட்களாக அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வந்தன. விழாவின் நிறைவாக, விஜயதசமி நாளான நேற்று இரவு சுமங்கலி பூஜை நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
பூஜையில் கலந்து கொண்ட சுமங்கலி பெண்களுக்கு சேலை, மஞ்சள், குங்குமம், வளையல்கள் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டன. சுமங்கலி பெண்கள் நீண்ட ஆயுளுடன் தீர்க்க சுமங்கலியாக வாழவும், குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். விழாவின் நிறைவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.