திருவாரூர்,
திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், தோன்றிய வரலாற்றினை கணக்கிட முடியாத பழமையும் வாய்ந்த கோவிலாகவும் திகழ்கிறது. சிறப்புமிக்க கோவிலுக்குரிய ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவில் முக்கிய நிகழ்வாக ஆழித்தேரோட்ட விழா விமரிசையாக நடைபெறும்.
அந்த வகையில், பங்குனி உத்தர திருவிழா கடந்த மாதம் 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க ஆழித்தேராட்டம் இன்று (ஞாயிற்றுகிழமை) கோலாகலமாக நடைபெற்று வருகிறது. காலை 9.05 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. அதனுடன் அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர் வடம் பிடிக்கப்பட்டது.
96 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கும் ஆழித்தேர், திருவாரூர் நகர வீதிகளில் அசைந்தாடி வருகிறது. ஆழித்தேரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருச்சி பெல் நிறுவனம் இரும்பு அச்சுகள், நான்கு இரும்பு சக்கரங்கள், ஹைட்ராலிக் பிரேக் வசதி உள்ளிட்ட வசதிகளை ஆழித்தேருக்கு அமைத்துள்ளது.
அலங்கரிக்கப்படாத ஆழத்தேரின் எடை என்பது 220 டன் ஆகும். 5 டன் எடையுள்ள பனஞ்சப்பைகள், 50 டன் எடையுள்ள கயிறு. 500 கிலோ எடையுள்ள அலங்கார துணிகள் ஆகியவற்றை பயன்படுத்தி தேர் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது தவிர தேரின் முன்புறம் கட்டப்படும் நான்கு குதிரைகள், ஞானி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள், தேரின் நான்கு புறங்களிலும் கட்டப்பட்டு அலங்கார தட்டிகள் ஆகியவற்றின் எடை 5 டன் ஆகும். அலங்கரிக்கப்பட்ட தேரின் மொத்த எடை 350 டன் னாகும்.
ஆழித்தேரோட்ட திருவாரூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் நகராட்சியின் மூலம் பக்தர்கள் வசதிக்காக நகரின் முக்கிய இடங்கள் மற்றும் தேரோ டும் வீதிகளில் குடிநீர் தொட்டிகள் அமைத்து குடிநீர் வசதிகள், நிரந்தர, தற்காலிக கழிவறைகள் வசதி அமைக்கப்பட்டுள்ளது.
தேரோடும் வீதிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் அனைத்து முக்கிய பகு திகளிலும் 200-க்கும் மேற்பட்ட துப்பரவு பணியாளர்களை கொண்டு உட னுக்குடன் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. நகரில் பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் பக்தர்கள் கூடும் இடங்களில் தொற்றுநோய்கள் பரவாத வண்ணம் கிருமிநாசினி, சுண்ணாம்பு தூள் தெளித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தீயணைப்பு வாகனம் மற்றும், 108 ஆம்புலன்ஸ் வாகனம், நடமாடும் மருத்துவ வாகனத்தில் மருத்துவக்குழு தயாராக தேரை பின் தொடர்ந்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆழித்தேரோட்டத்துக்கு பல்லாயிரகணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளதால், அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. ஆழித் தேரோட்டம் நடக்க உள்ளதால் திருவாரூர் நகரமே விழாக் கோலம் பூண்டு உற்சாகமாக காணப்படுகிறது. ஆழித்தேரோட்ட விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு போலீஸ் சூப்பிரண்டு, 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 15 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 53 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். போக்குவரத்தை மாற்று பாதையில் செலுத்தி சீரமைக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சுமார் 150 போக்குவரத்து போலீசார் நியமிக் கப்பட்டுள்ளனர்.