கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டாறு திருத்தலத்தில், ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இது 13 மலைநாட்டு திருத்தலங்களில் ஒன்று. மேலும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் இந்த ஆலயம் திகழ்கிறது.
இந்த ஆலய இறைவனின் திருநாமம், ‘ஆதிகேசவப் பெருமாள்’ என்பதாகும். தாயாரின் திருநாமம் ‘மரகதவல்லி நாச்சியார்.’
சிற்பக் கலைக்கு பெயர் பெற்ற இந்த கோவிலானது, சேரநாட்டு கட்டிடக்கலை பாணியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. கருவறைக்கு முன்பாக உள்ள மண்டபம், ஒற்றைக் கல்லினால் ஆனது. இந்த ஆலயத்தில் ‘போத்திமார்’ என்பவர்கள்தான் இறைவனுக்கு பூஜை செய்து வருகிறார்கள். இந்த ஆலயத்தின் கொடிக்கம்பத்தில் தமிழ் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கோவில் வெளிப்பிரகாரம் நெடுகிலும் கையில் திருவிளக்கு ஏந்தி நிற்கும் தீபலட்சுமிகளின் சிலைகள் இருபுறமும் அமைக்கப்பட்டிருக்கின்றன. பலிபீட மண்டபத்தில் இருபுறமும் ஒற்றைக் கல்லினால் ஆன பல கலைச்சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனான ஆதிகேசவப் பெருமாள், திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமியை பார்த்த வண்ணம் மேற்கு நோக்கி சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார். மேற்கு பார்த்த பெருமாளை தரிசிப்பது மிகவும் சிறப்பு. இடது கையை தொங்கவிட்டு, வலது கையில் முத்திரை காட்டி, தெற்கே தலைவைத்தும், வடக்கே திருவடி காண்பித்தும் சயனத்தில் உள்ளார் இந்த பெருமாள்.
இங்குள்ள ஆதிகேசவப் பெருமாள் திருமேனியானது, கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையால், 16,008 சாளக்கிராம கற்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. 108 திவ்ய தேசங்களிலேயே இந்த ஆலயத்தில் இருக்கும் பெருமாள்தான், கிடந்த கோலத்தில் மிகப்பெரிய அளவில் அருள்பாலிக்கிறார். இந்த திருமேனி சுமார் 22 அடி நீளம் கொண்டது.
இந்த சயனகோல பெருமாள் 22 அடி நீளம் கொண்டு காட்சி அளிப்பதால் ஒரு வாசல் வழியாக முழுமையாக தரிசிக்க முடியாது என்பதால், அவரை தரிசிக்க கருவறையில் திருமுகம், திருக்கரம், திருப்பாதம் என மூன்று வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருமுக நிலை வாசலில் சயனத்தில் உள்ள பெருமாளின் முகத்தையும், நீட்டிய இடது கரத்தையும், ஆதிசேஷனையும், கருடாழ்வாரையும் தரிசிக்கலாம்.
திருக்கர நிலை வாசலில், சின்முத்திரை காட்டும் பெருமாளின் வலது கரத்தையும், சங்கு, சக்கரம் உள்ளிட்ட ஐம்படைகளையும் தரிசிக்கலாம். ஸ்ரீதேவி - பூதேவி சமேத பெருமாளின் உற்சவத் திருமேனியையும் தரிசனம் செய்யலாம். திருப்பாத நிலை வாசலிலில், பெருமாளின் திருபாதங்களை தரிசிப்பதுடன், பெருமாளை சரணடைந்த அரக்கர்களையும் காணலாம். இவ்வாறு மூன்று நுழைவு வாயில் வழியாக மூலவரை தரிசிக்கும் வசதி எந்த கோவிலிலும் கிடையாது.
இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு அம்சமாக, புரட்டாசி மற்றும் பங்குனி மாதத்தில் சூரியன் அஸ்தமிக்கும்போது சூரிய கதிர்கள் மூலவர் ஆதிகேசவ பெருமாள் மீது விழுகிறது.
கன்னியாகுமரியில் இருந்து சுமார் 48 கிலோமீட்டர் தொலைவிலும், மார்த்தாண்டத்தில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது, திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில். திருவட்டாறு பஸ்நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.