ஆதிபுரீஸ்வரரை தரிசனம் செய்ய வரிசையில் நின்ற பக்தர்கள்  
ஆன்மிகம்

திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு: திரளான பக்தர்கள் தரிசனம்

இன்றும் (புதன்கிழமை), நாளையும் ஆதிபுரீஸ்வரரை கவசம் இன்றி நேரடியாக தரிசிக்கலாம்.

சென்னை,

திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் உள்ள ஆதிபுரீஸ்வரர் மூலஸ்தானத்தில் உள்ள சிவலிங்கம் புற்று வடிவில் இருப்பதால் தங்க கவசம் கொண்டு மூடப்பட்டிருக்கும். இந்த தங்க கவசம் ஆண்டுக்கு 3 நாட்கள், அதாவது கார்த்திகை மாதம் பவுர்ணமியில் இருந்து மூன்று நாட்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டு ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முதல் நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மூன்று நாட்கள் இந்த தரிசனம் நடைபெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பக்தர்கள் குவிந்தனர்

கோவில் வளாகத்திற்குள் கம்புகளால் வரிசை கட்டப்பட்டு பக்தர்கள் இந்த வரிசை மூலம் அனுப்பப்பட்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை 6 மணி அளவில் சாமி கவசம் திறக்கப்பட்டது. இதற்காக நேற்று மதியம் முதலே பக்தர்கள் வரிசையில் நின்றனர். பக்தர்களின் வரிசையானது கோவில் முன்புள்ள பிரதான சாலை வரை அதாவது அகத்தீஸ்வரர் ஆலயம் வரை நீண்டிருந்தது. இன்றும் (புதன்கிழமை), நாளையும் பக்தர்கள் நேரடியாக தரிசிக்கலாம்.

SCROLL FOR NEXT