சுவாமி, அம்பாள் பூம்பல்லக்கில் வீதி உலா 
ஆன்மிகம்

ஐப்பசி திருவிழா.. தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் கோவிலில் பாகம்பிரியாள் அம்பாள் பூம்பல்லக்கில் வீதி உலா

இன்று இரவு 8 மணிக்கு பாகம்பிரியாள் - சங்கரராமேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் பாகம்பிரியாள் அம்பாள் நேற்று பூம்பல்லக்கில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டிருந்து அம்பாளை தரிசனம் செய்தனர்.

திருக்கல்யாண விழா

தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஐப்பசி திருக்கல்யாண உற்சவ விழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டின் விழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்பாள் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பித்தளை சப்பரம், கிளி வாகனம், அன்னபட்சி வாகனம், சிம்ம வாகனம், வெள்ளிமயில் வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், கமல வாகனம், காமதேனு வாகனம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் 9-ம் திருநாளான நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. இரவு 7 மணிக்கு திருத்தேர் தடம்பார்த்தல், கேடயத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

பூம்பல்லக்கில் வீதிஉலா வந்த அம்பாள்

10-ம் திருநாளவான நேற்று காலை 7 மணிக்கு மஞ்சள் இடித்தல். 10 மணி சுந்தரபாண்டிய விநாயகர் கோவிலில் பாகம்பிரியாள் அம்பாளுக்கு குடமுழுக்கு தீர்த்தவாரி, தீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு பாகம்பிரியாள் அம்பாள் சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் பூம்பல்லக்கில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பூம்பல்லக்கில் அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை வழிபட்டனர்.

இன்று (வியாழக்கிழமை) காலை சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு சங்கரராமேஸ்வரர் ரிஷப வாகனத்தில் பாகம்பிரியாளுக்கு காட்சி தருதல், மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு பாகம்பிரியாள் - சங்கரராமேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு சுவாமி, அம்பாள் பட்டினபிரவேசம் நிகழ்ச்சி நடக்கிறது.

SCROLL FOR NEXT