திருப்பதி,
திருச்சானூரில் சுந்தரராஜ சுவாமி அவதார மகோற்சவம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 2-ம் நாளில் அனுமந்த வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் வளாகத்தில் சுந்தரராஜ சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுந்தரராஜ சுவாமி அவதார மகோற்சவம் 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த மகோற்சவம் ஒவ்வொரு ஆண்டும் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சுந்தரராஜ சுவாமி அவதார மகோற்சவம் நேற்று முன்தினம் (5.7.2026) தொடங்கியது.
முதல் நாளில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், மகா தீபாராதனை, ஊஞ்சல் சேவை நடைபெற்றது. மாலையில் உற்சவர்கள் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மகோற்சவத்தின் 2-வது நாளான நேற்றும் (திங்கட்கிழமை) சிறப்பு அபிஷேகம், ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இரவு அனுமன் வாகன வீதிஉலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அனுமந்த வாகனத்தில் சுந்தரராஜ சுவாமி எழுந்தருளி, மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவில் கோவில் துணை அதிகாரி ஹரிந்திரநாத், உதவி அதிகாரி தேவராஜூலு மற்றும் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவு நாளான இன்று இரவு கருட வாகன சேவை நடைபெறுகிறது.
அந்நியர் படையெடுப்பால் பாதுகாப்பு கருதி மதுரை அழகர்கோவிலில் இருந்து உற்சவர் சுந்தரராஜ சுவாமியை திருச்சானூருக்கு கொண்டு வந்தனர். அந்த வரலாற்றுச் சிறப்பை நினைவுகூரும் வகையில் சுந்தரராஜ சுவாமி அவதார மகோற்சவம் ஆண்டுதோறும் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தால் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.