திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல் திருவிழா மற்றும் சில முக்கிய தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
அவ்வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதலே பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது. நேரம் செல்லச் செல்ல பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்தது.
கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள், கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பொது தரிசன வரிசையில் செல்லும் பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் காத்து நின்று மூலவரை தரிசனம் செய்ய வேண்டியிருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடைபெற்றன.