தூத்துக்குடி,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்கியது. அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த் தாண்ட அபிஷேகம் நடந்தது. 5 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளினார். இதையடுத்து காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது.
இதைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை, மாலை 3 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி, அம்பாள்களுடன் தங்க ரதத்தில் கிரி வீதியில் பவனி வருகிறார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருநாளான வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு அன்று காலை யாகசாலையில் நடைபெறும் தீபாராதனைக்கு பின்னர், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கிருந்து திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்கள். மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். கடற்கரையில் அவர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.
7-ம் திருநாளான 16-ந்தேதி மாலை 6 மணியளவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. கந்தசஷ்டி விழாவையொட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் நேற்று காலை முதலே திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் குவியத்தொடங்கினர். அவர்கள் தங்குவதற்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
விழாவின் முதல் 5 நாட்களில் 1 லட்சம் பேரும், சூரசம்ஹாரம் அன்று 6 லட்சம் பேரும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருச்செந்தூர் கோவிலில் நாள்தோறும் சுமார் 15 ஆயிரம் பேருக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தரிசன வரிசையில் 6 லட்சம் தண்ணீர் பாட்டில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் 300 தற்காலிக கழிப்பறை வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் நலன் கருதி 493 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் கடற்கரையில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் 12 இடங்களில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டு, கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கந்த சஷ்டி நிகழ்வுகளைக் காண 26 இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. விழா நடைபெறும் நாட்களில் 5,000 காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.