திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவின் 5-ம் நாளில் சுவாமி, அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த மாதம் 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமியும், அம்பாளும் காலை மற்றும் மாலையில் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்கள் காட்சி கொடுக்கின்றனர்.
ஆவணித் திருவிழாவின் 5-ம் நாளான நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாரானை நடந்தது. இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில் பிரதான வாயில் அடைக்கப்பட்டது. அங்கு சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளினர். பின்னர் பிரதான வாயில் திறக்கப்பட்டவுடன் குடவருவாயில் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கீழ ரதவீதி பந்தல் மண்டப முகப்பில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி இருந்த சுவாமி ஜெயந்திநாதருக்கு எதிர் சேவை தீபாராதனை நடந்தது.
7-ம் திருநாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. 5 மணிக்கு சுவாமி சண்முகரின் உருகு சட்ட சேவை நடக்கிறது. காலை 9 மணியளவில் சுவாமி சண்முகர் சண்முகவிலாச மண்டபத்தில் இருந்து வெட்டிவேர் சப்பரத்தில் பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். பின்னர் சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறும். மாலை 4 மணியளவில் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருள்கிறார்.
8-ம் திருநாளான நாளை மறுநாள் (திங்கள் கிழமை) அதிகாலையில் சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்திலும், பகல் 12 மணிக்கு மேல் பச்சை சாத்தி கோலத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். 10-ம் திருநாளான 9-ந் தேதி (புதன்கிழமை) காலை 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.