திருமலை,
திருப்பதியில் நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான இன்று காலை மலையப்ப சுவாமி, மோகினி வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் வாகன சேவை விமரிசையாக நடைபெறுகிறது. வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, மாட வீதிகளில் வலம் வந்த மலையப்ப சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.
விழாவின் 4-ம் நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி 'பகாசுர வத' அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை சர்வ பூபால வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வாகன வீதிஉலாவில் கோவில் அதிகாரிகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை பல்லக்கு வாகன வீதி உலா நடைபெற்றது. யானைத் தந்தத்தால் ஆன பல்லக்கில் மோகினி வடிவில் வசீகரமான பேரழகியாக எழுந்தருளிய மலையப்ப சுவாமி, மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். மற்றொரு பல்லக்கில் ஸ்ரீ கிருஷ்ண சுவாமியும் எழுந்தருளினார்.
மாட வீதிகளில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், மலையப்ப சுவாமியின் தெய்வீக திருக்கோலத்தையும், கிருஷ்ண சுவாமியையும் தரிசனம் செய்தனர். இந்நிகழ்வில் திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், தேவஸ்தானத்தின் (TTD) உயர் அதிகாரிகள், வாரிய உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
விழாவின் சிகர நிகழ்வான கருட சேவை இன்று மாலையில் தொடங்கி விமரிசையாக நடைபெற உள்ளது. மாலை 6.30 மணியில் இருந்து இரவு 11.30 மணிவரை தங்கக் கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வருகிறார். இந்நிகழ்வைக் காண்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர்.