தும்புரு தீர்த்தம் (கோப்பு படம்) 
ஆன்மிகம்

ஏப்ரல் 1-ந்தேதி தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம்.. திருமலையில் விரிவான ஏற்பாடுகள்

தும்புரு தீர்த்தம் செல்வதற்கு மார்ச் 31-ந்தேதி காலை 6 மணியில் இருந்து ஏப்ரல் 1-ந்தேதி காலை 10 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தும்புரு தீர்த்தம் உள்ளது. திருமலை சேஷாசல வனப்பகுதியில் அமைந்துள்ள மிகவும் புனிதமான தீர்த்தங்களில் (நீர்நிலைகள்) தும்புரு தீர்த்தமும் ஒன்று. 'முக்கோட்டி' எனும் மங்கல நாளில் இந்தத் தீர்த்தத்தில் புனித நீராடுவது, பாவங்களைப் போக்கி மோட்சத்தை அருளும் என்பது ஐதீகம்.

அவ்வகையில் தும்புரு தீர்த்தத்தில் வருகிற 31-ந்தேதி மற்றும் ஏப்ரல் 1-ந்தேதி ஆகிய 2 நாட்கள் முக்கோட்டி உற்சவம் நடக்கிறது. பக்தர்கள் அடர்ந்த காட்டுப்பகுதி வழியாக மலையேறிச் சென்று தும்புரு தீர்த்தத்தை அடைந்து, புனித நீராடி வழிபடுவார்கள்.

பக்தர்களுக்கு தேவையான வசதிகள்

முக்கோட்டி உற்சவத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு முன்கூட்டியே வசதிகளை செய்து கொடுப்பது தொடர்பாக திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி பேசியதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகில் உள்ள தும்புரு தீர்த்தத்தில் ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முக்கோட்டி உற்சவம் நடக்கிறது. அதை முன்னிட்டு வருகிற 31-ந்தேதி காலை 6 மணியில் இருந்து ஏப்ரல் 1-ந்தேதி காலை 10 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

ஆம்புலன்ஸ் வசதி

பாபவிநாசனம் அணை அருகில் பக்தர்களுக்கு காலை உணவாக அன்னப்பிரசாதம், குடிநீர் ஆகியவை 100 ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் மூலம் வழங்கப்படும். தும்புரு தீர்த்தம் பகுதியில் முதலுதவி மையங்கள் அமைக்கப்படும். பக்தர்களுக்கு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தாலும், திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும் அவர்களை மீட்டுச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும். பக்தர்களுக்கு தேவையான மருந்துகளும் தயார் நிலையில் வைக்கப்படும். பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்களும், நர்சுகளும் தயாராக இருப்பார்கள்.

தும்புரு தீர்த்தத்துக்கு நீண்ட தூர நடைபயணம் மேற்கொள்ள வேண்டியிருப்பதால், அங்குச் செல்ல 60 வயதுக்கு மேற்பட்டோர், இதயம் மற்றும் சுவாச பிரச்சினை உள்ள நோயாளிகள், அதிக உடல் எடை கொண்ட பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பக்தர்கள் சமையல் பொருட்கள், கற்பூரம், தீப்பெட்டிகள் ஆகியவற்றை கொண்டு வர வேண்டாம்.

Also read:இந்த வார விசேஷங்கள்: 24-3-2026 முதல் 30-3-2026 வரை

வழிகாட்டி பலகைகள்

காவல், வனம், தேவஸ்தானம் ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் இணைந்து பாபவிநாசனம் முதல் தும்புரு தீர்த்தம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வார்கள். வழி நெடுகிலும் தும்புரு தீர்த்தத்துக்கு செல்ல வழிகாட்டி பலகைகள் அமைக்கப்படும்.

போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, கோகர்ப்பம் அணை பகுதியில் இருந்து பாபவிநாசனம் வரை ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்படும். தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. பக்தர்கள் மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Also read:நன்மைகளை வாரி வழங்கும் ராம நவமி