திருப்பதி,
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 7 மணியில் இருந்து 9 மணிவரை சிறிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கோவிந்தராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வாகன சேவையின்போது வேதப் பாராயணம், நாலாயிர திவ்யப் பிரபந்தம் ஓதப்பட்டது. மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. கலைஞர்கள் கோலாட்டம் ஆடினர். பக்தர்கள் பஜனை பாடல்களை பாடினர். சாமி வீதி உலா வந்தபோது பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர, நெய் ஆரத்தி காண்பித்தும் கோவிந்த கோஷம் எழுப்பியும் தரிசனம் செய்தனர்.
வாகன சேவை முடிந்ததும் கல்யாண மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு பால், தயிர், தேன், சந்தனம் மற்றும் பழ ரசத்தால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. அதில் திருமலை ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று மாலையில் ஹம்ச வாகன சேவை நடைபெற்றது. கோவிந்தராஜ சுவாமி ஹம்ச வாகனத்தின் மீது சரஸ்வதி தேவி அலங்காரத்தில் கையில் வீணையுடன் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வாகன சேவைக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட காளைகள், குதிரைகள் மற்றும் யானைகள் ஊர்வலமாக சென்றன. அதே வேளையில், பஜனைக் குழுக்கள் பஜனைப் பாடல்களைப் பாடியபடி சென்றனர். கோலாட்டம், நாட்டியம் போன்ற கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மாட வீதிகளில் பக்தர்கள் ஆரத்தி காண்பித்து பகவானை தரிசனம் செய்தனர்.
விழாவின் மூன்றாம் நாளான இன்று காலையில் சிம்ம வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 7 மணி முதல் 9 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிந்த நாம கோஷம், வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் என மாட வீதிகள் விழாக்கோலம் பூண்டிருந்தது.
வாகன சேவையைத் தொடர்ந்து, உற்சவருக்கு பால், தயிர், தேன், சந்தனக் கலவை மற்றும் பழச்சாறுகளால் ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது.
இன்று மாலை 5.30 மணி முதல் 6.00 மணி வரை ஊஞ்சல் சேவையும், இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை பிரம்மாண்டமான முத்துப்பல்லக்கு சேவையும் நடைபெறும்.
விழாவில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், ஜீயர்கள், கோயில் பணியாளர்கள், சேவகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.