திருப்பதி,
திருப்பதி கோதண்டராம சுவாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் காலை மற்றும் மாலை வாகன சேவைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், விழாவின் விழாவின் 5-வது நாளான நேற்று (21.3.2026) காலை 8 மணியளவில் பல்லக்கு வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கோதண்டராமர் 'மோகினி' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து காலை 9.30 மணியளவில் கருட பாதுகை ஊர்வலம், உற்சவர்களான சீதா, லட்சுமணர், கோதண்டராமருக்கு அபிஷேகமும், பல வண்ணமலர்களால் அலங்காரமும் செய்யப்பட்டது.
இதையடுத்து இரவு 7 மணியில் இருந்து 11 மணி வரை கருட சேவை கோலாகலமாக நடந்தது. அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் கோதண்டராம சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது மாட வீதிகளின் இருபுறமும் திரண்டிருந்த பக்தர்கள் கற்பூரம் ஏற்றி பகவானை வழிபட்டனர்.
வாகன சேவையில், திருமலை பெரிய ஜீயர் சுவாமி, சின்ன ஜீயர் சுவாமி, திருமலை திருப்பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி வீரபிரம்மம், கோவில் துணை நிர்வாக அதிகாரி, நாகரத்னா, கண்காணிப்பாளர் முனிசங்கர், கோவில் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் அர்ச்சகர்கள், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.