யானை வாகன வீதிஉலா 
ஆன்மிகம்

திருப்பதி பிரம்மோற்சவம்.. யானை வாகனத்தில் கோதண்டராமர் வீதிஉலா

அலங்கரிக்கப்பட்ட யானை வாகனத்தில் கோதண்டராம சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதி,

திருப்பதி கோதண்டராம சுவாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் காலை மற்றும் மாலை வாகன சேவைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

அவ்வகையில் விழாவின் 6-வது நாளான நேற்று காலை 8 மணியளவில் அனுமன் வாகன வீதிஉலா நடந்தது. திரேதாயுகத்தில் ராம பக்தராகவும், பக்தர்களில் முதன்மையானவராகவும் போற்றப்படும் அஞ்சநேயர், தம்மை சேவிக்கும் பக்தர்களுக்கு ஆன்மிக உயர்வை வழங்குபவர் என நம்பப்படுகிறது.

ஆகையாலேயே அனுமனை போற்றும் வகையில் உற்சவர் ராமச்சந்திர மூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் அனுமன் வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாட வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் தேங்காய் உடைத்தும் கற்பூர ஆரத்தி காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

வாகன வீதிஉலாவிற்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், எருதுகள், குதிரைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. பஜனை குழுக்கள் பக்தி பாடல்களை பாடினர். பெண்கள் பரத நாட்டியம், கோலாட்டம் ஆடினர். கேரள செண்டை மேளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து காலை 10.30 மணியில் இருந்து 11.30 மணி வரை உற்சவர்களான சீதா, லட்சுமணர், ராமச்சந்திர மூர்த்திக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகமும், பல வண்ணமலர்களால் அலங்காரமும் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 8.30 மணி வரை கஜ வாகன சேவை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட கஜ வாகனத்தில் (யானை வாகனம்) உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திருமலை ஜீயர் சுவாமிகள், கோவில் துணை அதிகாரி நாகரத்னா, கண்காணிப்பாளர் முனிசங்கர், கோவில் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் அர்ச்சகர்கள், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Also read:நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது