திருப்பதி கருட சேவை 
ஆன்மிகம்

திருப்பதி பிரம்மோற்சவ விழா... கோலாகலமாக நடைபெற்ற கருட சேவை

கருட வாகன சேவையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பகவானை தரிசனம் செய்தனர்.

திருப்பதி,

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் 5-ம் நாளான நேற்று காலை கோவிந்தராஜ சுவாமிக்கு பால், தயிர், தேன், சந்தனத்தால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து பல்லக்கு வாகனத்தில் உற்சவர் மோகினி அவதாரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீதி உலாவின்போது மங்கள வாத்தியங்களுடன் கோலாட்ட நிகழ்ச்சி நடந்தது.

திருவாபரணங்கள்

மேலும் கோவிலில் மகா கருட சேவைக்கு முன்பாக, திருமலை வெங்கடேஸ்வர சுவாமி கோவிலிலிருந்து ரத்தினங்கள், தங்கப்பதக்கங்கள் பதிக்கப்பட்ட ரூ.71 லட்சம் மதிப்புள்ள 4 திருவாபரணங்கள் கோவிந்தராஜ சுவாமிக்கு வழங்கப்பட்டது. இந்த ஆபரணங்கள் ஏதுரு ஆஞ்சநேய சுவாமி கோவிலில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சென்று வழங்கப்பட்டன.

திருப்பதி கருட சேவை

கருட சேவை

அதனை தொடர்ந்து நேற்று இரவு 7 மணி முதல் 10 மணி வரை கருடசேவை விமரிசையாக நடந்தது. அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் உற்சவர் கோவிந்தராஜ சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வாகன சேவைக்கு முன்னால் கலைஞர்களின் பரத நாட்டியம், நடனம், கலைநிகழ்ச்சி என மாட வீதி களைகட்டியது. குறிப்பாக கடவுள்கள் போன்று வேடமணிந்து தத்ரூபமாக நடித்து காட்டியது, பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

திருப்பதி பிரம்மோற்சவம், கலைநிகழ்ச்சி

கருட சேவையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், பீடாதிபதிகள், அர்ச்சகர்கள், கோவில் ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பகவானை தரிசனம் செய்தனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 'ஸ்ரீ பாஷ்யகார கைங்கர்ய அறக்கட்டளை'யின் தினேஷ்குமார், தேவஸ்தானத்திற்கு 8 திருக்குடைகளை நன்கொடையாக வழங்கினார்.

SCROLL FOR NEXT