திருப்பதி,
கோடை விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர்.
நேற்று முன்தினம் 97 ஆயிரத்து 561 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 57 ஆயிரத்து 780 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் 1, 2-ல் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பினர். அதேபோல் நாராயணகிரி தோட்டத்தில் உள்ள கொட்டகைகளில் பக்தர்கள் நிரம்பினர்.
அதேபோல் நேற்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அன்னதானக்கூடம், பூங்காக்கள், நான்கு மாடவீதிகள், நாராயணகிரி தோட்டம், கடைவீதிகளில் பக்தர்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் இருந்து பாதகங்கையம்மன் கோவில் வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட 'டைம் ஸ்லாட்' டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 18 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரம் வரை காத்திருந்ததாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
நேற்று மொத்தம் 98 ஆயிரத்து 58 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 49 ஆயிரத்து 234 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கை மூலம் ரூ.4.09 கோடி வருவாய் கிடைத்தது. 4.20 லட்சம் ரூபாய்க்கு லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே, அலிபிரி டோல்கேட்டில் தீவிர வாகனச் சோதனை செய்து திருமலைக்கு வாகனங்களை அனுப்பி வைப்பதால் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. வாகனச் சோதனைக்காக வாகனங்கள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்களின் ஆன்மிக யாத்திரையை முன்கூட்டியே திட்டமிட்டு வர வேண்டும். அவ்வாறு வரும் பக்தர்கள் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.