பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம், செப்பேடு கிராமத்தில் செம்பாத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம்,செப்பேடு கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை அருள்மிகு செம்பாத்தம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி திருப்பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்த வியாழக்கிழமை பந்தக்கால் நிகழ்ச்சியுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. அதன்பின் பிள்ளையார் பூஜை, புண்ணியாவசனம், அனுக்ஷை, நவகிரக பூஜை, கணபதி ஹோமம், கோபூஜை, தனபூஜை, தானிய பூஜை, வாஸ்து பூஜை, யாகேஸ்வரி பூஜை, பரிகார பூஜை, வேதிகை பூஜை, நவகிரக ஹோமம், தன்வந்திரி ஹோமம், துர்கா ஹோமம், பரிவார பூஜை அஷ்டபந்தனம் சாத்துதல், முன்கோபுர கலச பிரதிஷ்டை உள்ளிட்டவை நடைபெற்றன.
இன்று காலை கணபதி ஹோமம், தன்வந்திரி ஹோமம், நவகிரக ஹோமம், மகா பூர்ணாகுதியைத் தொடர்பந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. மங்கள வாத்தியம் முழங்க புனித நீர் அடங்கிய கலசங்களை வேத விற்பன்னர்கள் திருக்கோவிலை சுற்றி கொண்டுவந்தனர். இந்த கலசங்கள் கோபுரத்தை அடைந்ததும் கோபுர கலசத்திற்கும், மூலவருக்கும், பிரகார மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை சிறப்பாக செய்தனர்.
இதன் பின்னர், ஊர் எல்லையில் இருந்து சுவாமிக்கு தாய் வீட்டு சீதனம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மூலவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், மகா அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் செப்பேடு மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாளை முதல் 48 நாட்கள் மண்டலாபிஷேக நிகழ்ச்சி நடைபெறுகிறது.