ஆன்மிகம்

திருவண்ணாமலை: ஆனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமி அன்றும் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமி அன்றும் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

உகந்த நேரம்

இந்த நிலையில் ஆனி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. பவுர்ணமி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 5.57 மணிக்கு தொடங்கி மறு நாள் 30-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6.16 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவுர்ணமி தினத்தன்று அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும். கிரிவலம் செல்லவும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.