திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் அடுத்த கஸ்தம்பாடி கிராமத்தில், ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா வருகின்ற 13-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி சேத்துப்பட்டு மேல் நந்தியபாடியை சேர்ந்த இலக்கிய மாமணி சம்பத் பாரதியார் அவர்களால் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. அக்கூர் ஸ்ரீ முத்தியம்மன் நாடக மன்றத்தினரின் சார்பாக மகாபாரத நாடகமும் நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை அர்ஜுனன் தபசு (பனைமரம் ஏறும்) நிகழ்ச்சி நடைபெற்றது. அர்ஜுனன் வேடம் அணிந்த நாடகக் கலைஞர், தபசு மரத்தில் ஏறி தவம் செய்வதுபோன்று நிகழ்த்தி காட்டினார். இந்நிகழ்வில் கஸ்தம்பாடி மற்றும் அருகில் உள்ள கிராம மக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது
மகாபாரத போரில் கவுரவர்களை வெல்வதற்காக, சிவபெருமானிடம் பாசுபதம் என்ற ஆயுதம் பெற வேண்டி, அர்ஜுனன் சிறப்பு பூஜைகள் செய்து, பின்னர் தபசு மரத்தில் ஏறி ஒற்றைக்காலில் நின்றபடி தவம் செய்தான். அதை நினைவுபடுத்தும் வகையில் திரௌபதி அம்மன் கோவில் அக்னி வசந்த விழாவின்போது இந்நிகழ்வு நடைபெறுகிறது.