பூத வாகனத்தில் சந்திரசேகரர் வீதிஉலா 
ஆன்மிகம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: பூத வாகனத்தில் சந்திரசேகரர் வீதிஉலா

பிரத்யேக மெட்டல் டிடெக்டர் ஸ்கேனர் கருவி மூலம் பக்தர்களின் கைப்பைகள் உள்ளிட்ட உடைமைகளை சோதனை செய்யப்பட்ட பின்னரே சாமி தரிசனத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 3-ம் நாளான நேற்று காலை பூத வாகனத்தில் அம்பாளுடன் சந்திரசேகரரும், மூஷிக வாகனத்தில் விநாயகரும் வீதி உலா வந்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 2-ம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் இரவு பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், பராசக்தி அம்மன், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் ஆகியோர் வெள்ளி இந்திர விமானங்களிலும், சண்டிகேஸ்வரர் மரவிமானத்திலும் எழுந்தருளி மாட வீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பூத வாகனம்

3-ம் நாள் விழாவான நேற்று காலை 10.30 மணியளவில் விநாயகரும், அம்பாளுடன் சந்திரசேகரரும் அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். அங்கிருந்து வந்து ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் தயார் நிலையில் இருந்த மூஷிக வாகனத்தில் விநாயகரும், பூத வாகனத்தில் அம்பாளுடன் சந்திரசேகரரும் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மேளதாளங்கள் முழங்க விநாயகரும், அதன்பின்னர் சந்திரசேகரரும் கோவில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சாமி வீதி உலாவின்போது கோவில் யானை நமச்சிவாயம் முன்னே நடந்து சென்றது.

பிரார்த்தனை உண்டியல்

மேலும் கோவிலில் நேற்று காலையில் 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கோவிலில் 1,008 சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சாமிக்கு சங்குகளில் இருந்த புனிதநீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

ஆண்டுதோறும் தீபத்திருவிழாவின் 3-ம் நாள் விழாவின்போது பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக பிரார்த்தனை உண்டியல் வைக்கப்படும். அதன்படி நேற்று காலை பிரார்த்தனை உண்டியல் கோவில் கொடிமரம் அருகில் வைக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் நகர முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு உண்டியலில் காணிக்கை செலுத்தினர். தொடர்ந்து பக்தர்கள் பலர் பிரார்த்தனை உண்டியலில் காணிக்கை செலுத்தினர்.

மேலும் கோவிலில் பக்தர்களின் பாதுகாப்பு நடவடிக்கையாக போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலமும், மோப்ப நாய் தென்றல் உதவியுடனும் சோதனை செய்தனர். கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய உள்ளே வரும் வழிகளான ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயிலில் பிரத்யேக மெட்டல் டிடெக்டர் ஸ்கேனர் கருவி மூலம் பக்தர்கள் கைப்பைகள் உள்ளிட்ட உடைமைகளை சோதனை செய்யப்பட்ட பின்னரே சாமி தரிசனத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

பஞ்சமூர்த்திகள் வீதி உலா

இரவு 10 மணியளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிம்ம வாகனம் மற்றும் வெள்ளி அன்ன வாகனத்தில் எழுந்தருளி கோவில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT