திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் 4-ம் நாளான நேற்று காலை நாக வாகனத்தில் அம்பாளுடன் சந்திரசேகரரும், வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும் வீதி உலா வந்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 4-ம் நாள் விழாவான நேற்று காலை 10 மணி அளவில் பல்லக்கு வாகனத்தில் விநாயகரும், நாக வாகனத்தில் அம்பாளுடன் சந்திரசேகரரும் சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க விநாயகரும், அதன்பின்னர் நாக வாகனத்தில் சந்திரசேகரரும் கோவில் மாட வீதிகளில் உலா வந்து பக் தர்களுக்கு அருள்பாலித்தனர். சாமிக்கு முன்னதாக கோவில் யானை மாட வீதிகளில் உலா வந்தது. மாட வீதிகளில் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் பக்தர்கள் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
இரவு 10 மணியளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் வெள்ளி கற்பக விருட்சம், காமதேனு வாகனம் மற்றும் இதர வெள்ளி வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தீபத் திருவிழாவின் போது சுவாமி பெரிய வெள்ளி ரிஷப வாகனத்திலும், வெள்ளி ரதத்திலும் எழுந்தருளி வீதி உலா வருவது முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும். அதன்படி இன்று (வியாழக்கிழமை) இரவு சுவாமி பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருள்கிறார். நாளை (வெள்ளிக்கிழமை) இரவு வெள்ளி ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்வார்கள்.
இதையொட்டி நேற்று வெள்ளி ரதம் பாலிஷ் போடப்பட்டு தயார் செய்யும் பணி நடைபெற்றது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற உள்ளது.