ஆன்மிகம்

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் மலை மீது ஏற பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

தடையை மீறி அண்ணாமலையார் மலை மீது ஏறுபவர்களை தடுப்பதற்காக வனத்துறையின் மூலம் 28 இடங்களில் 24 மணி நேரமும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் மலை மீது ஏற, பொது பக்தர்களுக்கு அனுமதி இல்லை, பாரம்பரிய முறைப்படி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் பணியில் ஈடுபடும், உரிய அனுமதி பெற்ற குழுவினருக்கு மட்டுமே மலை ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் வந்தனா கார்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 12-ந்தேதி தொடங்கியது. வருகிற 28-ந்தேதி வரை விழா நடைபெற உள்ளது. இதில் முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் வருகிற 24-ந்தேதியன்று, பவுர்ணமி தினமும் சேர்ந்து வருவதால் அன்றைய தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 1.12.2024-ன் போது மேக வெடிப்பு மற்றும் பெஞ்சல் புயல் காரணமாக பெய்த மழையினால் அண்ணாமலையார் மலையில் 7 இடங்களில் சுமார் 6 ஹெக்டேர் பரப்பிற்கு நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் 7 பேர் உயிரிழந்தனர். எனவே அது முதற்கொண்டு மகாதீபம் மற்றும் இதர நாட்களில் பக்தர்கள் அண்ணாமலையார் மலை ஏறத்தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த வருடமும் பருவமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. மேலும் அண்ணாமலையார் மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். இதில் மேற்கு பகுதியில் 699.03 ஹெக்டேர் வனப்பகுதி காப்புக்காடாக 1885-ம் ஆண்டிலும், கிழக்குப் பகுதியில் 254 ஹெக்டேர் வனப்பகுதி காப்பு நிலமாக 2026-ம் ஆண்டிலும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. எனவே, அண்ணாமலையார் மலை முழுவதும் தமிழ் நாடு வனச்சட்டம்-1882-ன் கீழ் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது.

பொது பக்தர்களுக்கு அனுமதி இல்லை

எனவே பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறும் வருகிற 28-ந்தேதி வரை மற்றும் இதர நாட்களிலும் சட்டத்திற்கு புறம்பாக பொதுமக்கள் யாரும் அண்ணாமலையார் மலையேற அனுமதியில்லை. மீறுபவர்கள் மீது தமிழ்நாடு வனச்சட்டம், 1882-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்திற்கு புறம்பாக அண்ணாமலையார் மலை மீது ஏறுபவர்களை தடுப்பதற்காக வனத்துறையின் மூலம் 28 இடங்களில் 24 மணி நேரமும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் 4 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து பாதுகாப்பு பணியை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் 120 வனத்துறை பணியாளர்களும், தொண்டு நிறுவனத்தை சார்ந்த சுமார் 250 தன்னார்வலர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மலை ஏற யாருக்கு அனுமதி?

பாரம்பரிய முறைப்படி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் பணியில் ஈடுபடும், உரிய அனுமதி பெற்ற குழுவினருக்கு மட்டுமே மலை ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பக்தர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பாக, பரணி தீபம் மற்றும் மகா தீபத்தை கோவிலுக்குள் இருந்து தரிசிப்பதற்கான கட்டண நுழைவுச் சீட்டு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக திருவண்ணாமலை மாவட்ட பக்தர்கள் 1500 பேர், பிற மாவட்ட பக்தர்கள் 1500 பேர் என மொத்தம் 3,000 பேருக்கு இலவச அனுமதிச் சீட்டுகள் இணையதளம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்காக முன்பதிவு செய்தவர்களில், கணினி வாயிலாக குலுக்கல் முறையில் 3000 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டுள்ள பக்தர்களுக்கு அவர்களது கைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தி மூலம் இணைய வழி அனுமதிச் சீட்டுக்கான இணைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 24ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் டிசம்பர் 5, சனிக்கிழமை, பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT