உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள், இறந்துபோன தங்களின் முன்னோர்களை நினைவுகூரும் வகையில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் 2-ந்தேதியை கல்லறை திருநாளாக அனுசரிக்கிறார்கள். இந்த நாளில் கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களை அடக்கம் செய்த கல்லறைகளை சுத்தம் செய்து, வர்ணம் பூசி, வண்ண மலர்களால் அலங்கரிப்பார்கள். பின்னர் அந்தந்த பகுதி தேவாலய பங்குதந்தை, ஆயர் மூலம் கல்லறை தோட்டங்களில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு புனிதம் செய்யப்படும். தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
அவ்வகையில் இந்த ஆண்டு இன்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கல்லறைகள் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. பிரார்த்தனையைத் தொடர்ந்து உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் மைக்கேல் பாளையத்தில், ஏராளமானோர், தங்களது முன்னோர்களின் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்,
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் கல்லறைத் திருநாள் அனுசரிக்கப்பட்டது. தொண்டி புனித சிந்தாத்திரை அன்னை ஆலயத்தில் அதிகாலையில் பங்குத் தந்தை வியாகுல அமிர்தராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொண்டி பகுதியில் உள்ள கிறித்தவர்கள் இதில் கலந்து கொண்டனர். இதேபோல் கல்லறைகளில் திருப்பலி நடைபெற்றது. ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களை நினைத்து கல்லறைகளில் ஜெபம் செய்தனர்.
காரங்காடு புனித செங்கோல் மாதா திருத்தலத்தில் பங்குத்தந்தை ரெஞ்ஜீஸ், சம்பை புனித செபஸ்தியார் ஆலய பங்குத் தந்தை செல்வராஜ், பாக்கிய ராஜ் ஆகியோர் சிறப்பு திருப்பலி நடத்தினர். சம்பை, கண்கொள்ளான் பட்டிணம், சின்ன மடம் தோப்பு, சோழியக்குடி பகுதி கிறித்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.