திருமலை,
திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு கருடசேவை (தங்கக் கருட வாகன வீதிஉலா) நடப்பது வழக்கம். அதன்படி இந்த மாதத்துக்கான (அக்டோபர்) பவுர்ணமி கருடசேவை இன்று (திங்கட்கிழமை) இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை நடக்கிறது. சர்வ அலங்காரத்தில் மலையப்பசாமி தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
அதேபோல் திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணிவரை பவுர்ணமி கருடசேவை நடக்கிறது. திருமலை, திருப்பதியில் நடக்கும் கருடசேவையில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.