பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் 
ஆன்மிகம்

திருப்பதி பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் என்னென்ன? தேவஸ்தான அதிகாரி விளக்கம்

அனைத்துத் துறைத் தலைவர்களும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளை நிறைவு செய்யவேண்டும் என தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி உத்தரவிட்டார்.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு வருடாந்திர பிரம்மோற்சவ விழா மற்றும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா என 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடக்க உள்ளன. அதையொட்டி திருமலையில் உள்ள சுதர்மா அரங்கில் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் வெங்கையா சவுத்ரி பேசியதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு வருடாந்திர பிரம்மோற்சவ விழா, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறைக்கு நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்க உள்ளது. முதலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடப்பதையொட்டி செப்டம்பர் மாதம் 8-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.

14-ந்தேதி மாலை பிரம்மோற்சவ விழா அங்குரார்ப்பணம், 15-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றம், 19-ந்தேதி கருட சேவை, 22-ந்தேதி தேரோட்டம், 23-ந்தேதி சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது. வாகன சேவைகள் தினமும் காலை 8 மணியில் இருந்து 10 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரையிலும் நடக்கின்றன.

அன்னப்பிரசாதம் வினியோகம்

பிரம்மோற்சவ விழா காலங்களில் கோவில் நெறிமுறைக்கு உட்பட்ட முக்கிய பிரமுகர்களை தவிர மற்ற அனைத்துப் பிரிவினருக்கும் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயது முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனம், காணிக்கையாளர்களுக்கான சிறப்பு தரிசனங்கள் ஆகியவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன.

கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள், போக்குவரத்து ஒழுங்குமுறை, தெளிவான வழித்தட வரைபடம், போதுமான வாகன நிறுத்துமிட வசதிகளை உறுதி செய்யும் பொறுப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தரிசன வரிசைகள், மாட வீதிகளில் உள்ள கேலரிகள், பிற முக்கிய இடங்களில் தங்குத்தடையின்றி அன்னப்பிரசாதம் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். பக்தர்களுக்கான வசதிகளை பொறியியல் துறையினர் விரைந்து முடிக்க வேண்டும்.

இருசக்கர வாகனங்களுக்கு தடை

பொதுக்கழிவறைகள், வசதிகளின் தூய்மையை உறுதி செய்ய கூடுதல் சுகாதாரப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். திருப்பதி, திருமலையில் பல்வேறு இடங்களில் தகுந்த மின் விளக்கு அலங்காரம், பழம், மலர் அலங்காரங்கள் செய்யப்பட வேண்டும். பக்தர்களுக்கு சேவை செய்ய ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்களை பணியில் அமர்த்திக் கொள்ளலாம்.

கருட சேவையின்போது எதிர்பார்க்கப்படும் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக செப்டம்பர் மாதம் 18-ந்தேதி இரவு 9 மணியில் இருந்து 20-ந்தேதி காலை 6 மணி வரை திருமலை-திருப்பதி, திருமலை-திருப்பதி ஆகிய 2 மலைப்பாதைகளில் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும். பக்தர்களுக்கு வினியோகம் செய்வதற்காக போதிய அளவில் ஸ்ரீவாரி லட்டுகள் இருப்பு வைக்கப்பட வேண்டும். அனைத்துத் துறைத் தலைவர்களும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அனைத்து ஏற்பாடுகளையும் நிறைவு செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்

ஆய்வுக் கூட்டத்தில் தேவஸ்தான தலைமை பொறியாளர் சத்யநாராயணா, துணை செயல் அலுவலர்கள் லோகநாதம், பாஸ்கர், ராஜேந்திர, சோமநாராயணா, தோட்டப் பிரிவு துணை இயக்குநர் சீனிவாசுலு, தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் குசும குமாரி, பொறியாளர் சந்திரசேகர், பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை அதிகாரி சுரேந்திரா, உணவக சிறப்பு அலுவலர் ஜி.எல்.என். சாஸ்திரி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.