தென்தாமரைகுளம்,
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைபதியில் ஆண்டுதோறும் ஆவணி, தை, வைகாசி ஆகிய மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா இன்று வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பணிவிடையை குருமார்கள் பையன்ஸ்ரீராம், பையன் சிவராஜ், பையன் பொன்ராஜ், ஸ்ரீராம பையன் ஆகியோர் செய்தனர். விழா வருகிற ஜூன் 1-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.
முதல் நாளான இன்று அதிகாலை 5.30 மணி அளவில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குரு பையன் காமராஜ் தலைமை தாங்கினார். குருமார்கள் பால் பையன், பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குரு பையன் ராஜா கொடியேற்றி வைத்தார்.
பின்னர், பணிவிடையும், தர்மங்களும், வாகன பவனியும் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு அன்னதர்மம் நடைபெற்றது. மாலையில் பணிவிடையும் இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழா நாட்களில் தினமும் மாலையில் வாகன வீதியுலா நடைபெறுகிறது. தினமும் ஒவ்வொரு வாகனத்தில் அய்யா எழுந்தருளி, வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். 28-ம் தேதி அய்யா கருட வாகனத்தில் எழுந்தருள்கிறார். 29-ம் தேதி அய்யா குதிரை வாகனத்தில் எழுந்தருளி சாமிதோப்பு, முத்திரி கிணறு சமீபம் கலி வேட்டையாடுதல் நிகழ்வு நடக்கிறது.
திருவிழாவின் 11-ம் நாளான ஜூன் 1-ம் தேதி திங்கட்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது. நண்பகல் 12 மணிக்கு அய்யா பல்லக்கில் பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருளியதும், பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து வழிபடுவார்கள்.